வேதாகமத்தை படிக்கும் முன் நாம் அறிய வேண்டிய சில எச்சரிப்புகள்!

வேதாகமம் படிக்கும் முன் எச்சரிப்புகளா? என்ன ஆரம்பத்திலேயே பயமுறுத்தலாக இருக்கிறது என யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம்! ஆனால் இதைப்பற்றி நாம் ஆழமாய் தியானிப்பதற்குமுன் வேதாகமம் எப்படிபட்டது என நாம் புரிந்து கொள்வது மிக அவசியமாக இருக்கிறது.

உதாரணமாக:

“வேதாகமம் தேவனிடத்திலிருந்து தான் வந்ததா? தேவன் அவரே எழுதி கொண்டு வந்து நம் கையில் கொடுத்துவிட்டாரா? எல்லாம் மனிதன் எழுதிய புத்தகம் தான் இதை தேவ புத்தகம் என்று சொல்வதெல்லாம் சும்மா!” என்றெல்லாம் நம்மை அநேகர் கேள்வி கேட்க வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லுவோம்? அவர்களுக்கு சொல்ல நம்மிடம் பதில் இருக்கிறதா? வாருங்கள் அதற்கான  விடையை பார்ப்போம்!

முதலாவதாக வேதவாக்கியங்கள் யார் மூலமாய் நம்மிடத்திற்கு வந்தது?

வேதவாக்கியங்களெல்லாம் ஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறது என நாம் 2 தீமோ 3:16 படிக்கிறோம்.


2 தீமோ 3:16  வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,


சரி இந்த ஆவியானவர் யாரிடத்திலிருந்து இதனை கொண்டு வருகிறார்? யோவான் 15:26 இல்..

யோவான் 15:26  பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.

… என வாசிக்கிறோம். இதிலிருந்து அவர் தேவனிடத்திலிருந்து தான் அந்த வசனங்களை கொண்டுவருகிறார் என தெரிகிறது.

எங்கே இருந்து கொண்டு வருகிறார்?

1பேதுரு 1:12 இலிருந்து அவர் பரலோகத்திலிருந்து வசனங்களை கொண்டுவருவதாய் நாம் காண முடிகிறது.


1பேதுரு 1:12 தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.


இப்படி பரலோகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட வசனங்கள் மனிதர்களிடத்தில் எப்படி வந்தடைந்தது?

எண்ணாகமம் 11:25 வாசிக்கும்போது இங்கே ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்றது.


எண்ணாகமம் 11:25 கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.


இங்கே தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வதை பார்க்கிறோம். இதிலிருந்து ஆவியானவர் மேலிருந்து ஒரு மனிதன் மேல் இறங்கி அவன் மூலமாய் தேவ வசனத்தை பேச வைத்திருக்கிறார் என புரிகிறது. இப்படி இறங்கும் போது தரிசனங்களாகவும், பேச்சாகவும் அவர்களுக்கு சில விஷயங்களை வெளிப்படுத்துவார். இப்படி அவர் இறங்கி தேவ வசனம் உரைக்கும் மனிதரை தீர்க்கதரிசி என்றும் அவர் சொல்லும் வாக்கியங்களை தீர்க்கதரிசனம் என்றும் சொல்லுவர்.

இப்படி அவர்கள் சொல்லும் தீர்க்கதரிசனத்தில் தங்களுடைய சொந்த பேச்சையோ, சொந்த கருத்தையோ உரைக்கமாட்டார்கள். இதனை நாம்  2பேதுரு 1:20,21 வசனங்களில் பார்க்கமுடிகிறது


2பேதுரு 1:20,21

20 வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.

21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.


இப்படி மனிதர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு பேசினார்கள். இதை புரிந்து கொள்ள நாம் சில எடுத்துகாட்டுகளை பார்ப்போம்.

எ.கா. 1: நாம் அனைவரும் பேனா உபயோகிப்பதுண்டு. நாம் எழுதிய ஒரு கடிதத்தை மற்றொருவரிடம் காட்டி இதனை நான் எழுதவில்லை இதை இந்த பேனா தான் எழுதியது என்று சொன்னால் அவர் நம்மை எப்படி பார்ப்பார்? பேனா எப்படி தானக எழுதும் நீ என்ன பைத்தியமா என்று கூட நம்மை பார்த்து கேட்க வாய்ப்புண்டு. என்ன தான் பேனா மையை வெளிப்படுத்தி எழுத பயன்பட்டாலும் அந்த எழுத்தின் கருத்து அந்த பேனாவை பயன் படுத்தியவர்க்கே சொந்தம் என்பது தானே நிதர்சனம்.

எ.கா 2: ஒரு மைக்செட்டில் பேசும்போது நாம் இதை நான் பேசவில்லை இந்த மைக் செட் தான் பேசியது என்று சொன்னால் எப்படி இருக்கும்? இந்த விஷயத்திலும் மைக் செட் நம் ஒலியை வாங்கி அதை பெருக்கி வெளியிட பயன்பட்டாலும் அது வெளியிடும் ஒலியும் அந்த ஒலியினுடைய கருத்தும் அந்த மைக் செட்டை பயன்படுத்துபவருக்கே சொந்தம் என்பது தானே நிதர்சனம்.

இப்படி தான் தீர்க்கதரிசிகள் தேவனுடைய வாயாகவும் அல்லது மைக்செட்டாகவும், பேனாவாகவும் இருந்து அவர் மக்களுக்கு சொல்ல நினைத்ததை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதில் அவர்களுடைய சொந்த கருத்து எதுவும் கிடையாது.

இதனை 2சாமு 23:2, ஏசா 59:21,51:16, போன்ற வசனங்களில் தேவன் அவருடைய பேச்சை தீர்க்கதிரிசளுடைய வாயில் வைத்து பேச வைத்ததாய் உறுதி படுத்துகிறார்.


2சாமு 23:2 கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.

ஏசா 59:21 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசா 51:16 நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்லுவதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.


சரி எழுத்தாய் வந்தது எப்படி?

இப்படி பரிசுத்த ஆவியால் ஏவபட்டு பேசினதை எழுதியும் வைத்தார்கள். இதனை மாற் 12:19  இல் நம்மால் பார்க்க முடிகிறது.


மாற் 12:19  போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.


மோசே எங்கே எழுதி வைத்திருக்கிறார்? யாத் 24:4 இல் அவர் எல்லாவற்றையும் எழுதி வைத்ததாக காண முடிகிறது


யாத் 24:4 மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.


இதை போல எசே 24:2, 43:11,யாத் 34:27, எரே 36:2, 28, 45:1, வசனங்களிலும் தேவ வார்த்தைகளை எழுதி வைத்ததாய் நம்மால் பார்க்க முடிகிறது.

இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டில் இருப்பது நமக்கு தெரிகிறது.புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் புத்தகங்கள் சுவிசேஷங்களாகவும் மற்ற அனைத்து புத்தகங்களும் கடிதங்களாய் எழுதப்பட்டிருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். முன்னமே நாம் பார்த்ததை போல இவையும் சொந்த கருத்து உடையதாய் இருப்பதில்லை.

இப்படி வேதவாக்கியங்களெல்லாம் பரலோகத்திலிருந்து வந்திருப்பது நமக்கு தெளிவாகிறது. “அப்படியானால் பரலோகத்திலிருந்து வந்த இந்த வார்த்தைகளில் பூமியில் நடந்த வரலாறுகள் ஏன் இடம் பெற்றிருக்கிறது? இதுவே இது மனிதனுடைய வார்த்தைகள் தான் என காட்டுகிறதல்லவா?”. என்று ஒரு கேள்வி நம்மை கேட்டாலும் அதற்கும் வேதம் விடை தருகிறது.

வேதாகமத்தில் உலகத்தின் வரலாறு மட்டுமல்லாது இன்னும் நிறைய விஷயங்களும் இருக்கிறது. வேதாகமம் பின்காணும் இவை அனைத்தையும் உள் கொண்டுள்ளது.

  • தேவனுடைய வார்த்தைகள்
  • மனிதனுடைய வார்த்தைகள்
  • பிசாசினுடைய வார்த்தைகள்
  • உலகத்தின் வரலாறுகள்
  • விஞ்ஞானம்

என்ன இவ்வளவும் இருக்கிறதா என பார்க்கிறீர்களா? ஆம்! இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சில வசனங்களை பார்ப்போம்.

1)தேவனுடைய வார்த்தைகள் :

தேவன் மனிதர்களிடம் பேசிய வார்த்தைகள்

ஆதாமிடம்  ஆதி 3:9

நோவாவிடம்  ஆதி 6:13

ஆபிரகாமிடம்  ஆதி 12:9

தேவன் தான் தனக்குள் சொன்ன வார்த்தைகள்: ஆதி 8:22

தேவன் சாத்தானிடம் சொன்ன வார்த்தைகள்: யோபு 1:7,8

2)மனிதனுடைய வார்த்தைகள்

தேவனிடம் ஆதி 3:10,

மற்ற மனிதர்களோடு ஆதி 11:4

3) பிசாசினுடைய வார்த்தைகள்: யோபு 1:9, மத் 4:3,9

4) உலக வரலாறுகள் :

ஆதி 1-  உலகம் படைக்கப்படுதல்

தானி 2 – இராஜ்ஜியங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

லூக் 2:1-3 , 3:1 – இராஜாக்களின் காலங்களில் நடந்த சங்கதிகள்

யோபு 40:15 – டைனோசர்கள் பற்றி

5) விஞ்ஞானம்:

பிரசங்கி 1:7, யோபு 36:27 – நீர் சுழற்சி

ஏசா 40:22, யோபு 26:7 – பூமியின் உருண்டை தன்மை, அந்தரத்தில் தொங்கும் தன்மை

இப்படி பல்வேறு விஷயங்களை பற்றி வேதாகமம் பேசுகிறது. இவை எல்லாவற்றையும் சேர்த்து தான் தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் உலகத்தில் எவ்வளவோ வரலாறுகளும் நிகழ்வுகளும் நடைபெற்றிருக்க அவை எல்லாம் இதில் பதிவிடபடவில்லையே ஏன்?

ஏன் என்று சங்கீதம் 12:6 நமக்கு விளக்குகிறது.


சங்கீதம் 12:6  கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தசொற்களாயிருக்கின்றன.


இந்த வசனத்திலிருந்து தேவன் இந்த தகவல்களை எல்லாம் வடிகட்டி தான் நமக்கு தந்திருக்கிறார் என்பது தெரியவருகின்றது. அது மட்டுமல்லாமல் இதில் நமக்கு தேவையானது அனைத்தையுமே உள்ளடக்கியுள்ளார் இதனை ஏசாயா 48:17 இல் நம்மால் பார்க்க முடிகிறது.


ஏசாயா 48:17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.


இதையே புதிய ஏற்பாட்டில் அப்போ 20:20 இலும் நம்மால் பார்க்க முடிகிறது.


அப்போ 20:20 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,


இதுமட்டுமல்லாமல் பிரசங்கி 12:12 இல் அனேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவு இராது என்றும், யோவான் 21:25 இல் இயேசுவின்  செயல்களே நமக்கு அளந்து தான் கொடுக்கபட்டிருக்கிறது என்றும் தெரிய வருகிறது.

ஆனால் இதிலும் தேவனுடைய மகிமை வெளிவருகிறது எப்படியென்றால் ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய 5 புத்தகங்கள் மோசேவால் எழுதபட்டது என்று நமக்கு தெரியும். ஆனால் யோசித்து பாருங்கள் தான் பார்த்திராத ஆதாமை பற்றியும், நோவாவை பற்றியும், ஆபிரகாமை பற்றியும் அவர்கள் செய்தவற்றையும் பல ஆண்டுகளுக்கு பின்னால் வரும் மோசே திட்டவட்டமாக எழுதியிருக்கிறார் என்றால் இதுவே இந்த செயல் மனிதனால் ஆனதில்லை என்றும் தேவன் நமக்கு தேவையானவற்றை வெளிப் படுத்தியிருக்கிறார் என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது இல்லையா!

யோபின் புத்தகத்தையும் பாருங்கள். யாரோ ஒரு மனிதனும் அவர்களுடைய நண்பர்களும் பேசியவற்றை குறித்துவைத்து புத்தகமாக வெளியிடவேண்டும் என்று யாராவது ஆர்வம் கொள்வார்களா? ஏன் நீங்களும் நானும் என்ன நினைப்போம் நாலுபேர் ஏதோ சண்டையிட்டு கொள்கிறார்கள் நமக்கு எதற்கு? என்று நினைப்பது சகஜமானது தான். ஆனால் அந்த நிகழ்வு நமக்கு பதிவிடப்படாமல் போயிருந்தால் இயேசு கிறிஸ்துவை தவிர வேறு ஒரு மனிதரும், சட்டங்கள் எதுவும் இல்லாத காலத்திலேயே, மிக மோசமான சூழ்நிலையிலும் தேவனுக்கு  உண்மையாக இருந்திருக்கிறார் என்பதும் அதிலிருந்து நம்மாலும் அப்படி இருக்க முடியும் என்கிற ஒரு தூண்டுதலும் நமக்கு கிடைக்காமலேயே போயிருக்கும்.

இதன் மூலம் உலக வரலாற்றிலும், தன்னுடைய வார்த்தைகளிலும், மனிதனுடைய வார்த்தைகளிலும், பிசாசின் வார்த்தைகளிலும், விஞ்ஞானத்திலுமிருந்து தேவன் நமக்கு தேவையானதையும், பிரயோஜனமானதையும் தேர்ந்தெடுத்து, முழுமையாக சுத்தம் செய்து பரிசுத்த ஆவியின் மூலமாய் மனிதர்களுக்கு வெளிப்படுத்தி அதை பதிவிடவும் வைத்து நமக்கு கொடுத்திருக்கிறார் என்பது சந்தேகமே இல்லாமல் நமக்கு தெரிகிறது.

இப்படி முற்காலங்களில் கற்களிலும், தோள் சுருள்களிலும், எழுதிவைக்கப்பட்ட வேத வாக்கியங்கள் காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பேப்பர்களில் அச்சிட பெற்று நமது கையில் வேதாகம புத்தகமாக வந்து அடைந்திருக்கிறது. இப்போது இன்னும் ஒரு படிமேல் சென்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தின்மூலம் நமது ஸ்மார்ட் போன்களிலும், கணினிகளிலும் வந்தடைந்திருக்கிறது.

இவ்வளவு அழகாய் எண்ணுக்கடங்காத தகவல்களிலிருந்து தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து தேவனே மனிதனை கொண்டு எழுதியிருக்கிற இந்த வசனங்களில் இல்லாதவை எல்லாம் நமக்கு பிரயோஜனமாயிராது அல்லது தேவையானதாயிராது என்று சொல்லலாம் இல்லையா?

இப்போது நம் தலைப்பிற்கு வருவோம் இப்படிப்பட்ட புத்தகத்தில் இல்லாததை நாம் ஒருவேலை செய்தால்?

இதை குறித்து வேதாகமம் நம்மை பலமாய் எச்சரிக்கிறது (அல்லது தேவனே எச்சரிக்கிறார் என்று சொல்லலாம்  இல்லையா.) அப்படி என்ன எச்சரிக்கிறது என்று பார்ப்போம்.

ரோமர் 11:34 ஐ வாசிக்கும்போது அப்படி இல்லாததை செய்தால் தேவனுக்கே எது தேவை எது தேவையில்லை என்று ஆலோசனை சொல்லுகிறவர்களாய் இருப்போம் என்று தெரிகிறதல்லவா?


ரோமர் 11:34 கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?


அதுமட்டுமல்லாமல் அவர் புடமிட்டு நம்மிடம் தந்தவற்றை மீறினால் நாம் பொய்யர்கள் என்று வேதாகமம் நீதி 30:5,6 மூலம் திட்டவட்டமாக கூறுகிறது.


நீதி 30:5,6

5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.

6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.


மேலும் இப்படி வேதாகமத்தில் இருப்பதையல்லாமல் நம் சொந்த கருத்துக்களை தேவகாரியத்தில் சேர்ப்பதையும், மக்களிடம் சொல்லுவதையும் குறித்து வேதாகமம் அப்படிப்பட்டவர்கள் பிசாசின் பிள்ளைகள் என்றும் இன்னும் ஒரு படி மேலே சென்று மனிதர்களை கொல்லும் கொலைபாதகர்கள் என்றும் யோவான் 8:44 இன் மூலம் சித்தரிக்கிறது.


யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.


(இதிலிருந்து பிசாசு எப்போது மனிதர்களை கொலைசெய்தான் என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழும்பலாம் அதை குறித்து மற்றொரு பதிவில் விரைவில் பார்ப்போம்!)

அதுமட்டுமல்லாமல் மத் 5:37 இன் மூலம் உள்ளதை உள்ளதாயும் இல்லாததை இல்லை என்றும் சொல்லுங்கள் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் தீமை செய்கிறவர்களாய் இருப்போம் என்றும் வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது.


மத் 5:37  உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.


இல்லாததை பேசுவது மற்றும் செய்வது  என்பதிலிருந்து மட்டுமில்லாமல் யோசிப்பதிலிருந்தே வேதாகமம் நம்மை தடுத்து எச்சரிக்கிறது. இதனை 1 கொரி 4:6 இல் நம்மால் காண முடிகிறது. அதுமட்டுமல்லாமல் அப்படி தான் வேதாகமத்தில் பெரிய ஊழியக்காரரான பவுலும் அவரை விட சிறிய ஊழியக்காரரான அப்பொல்லோவும் வாழ்ந்து காட்டி இப்படிதான் எல்லாருமே வேதத்தை பின்பற்ற வேண்டும் என நமக்கு உதாரணத்தையும் வைத்திருக்கிறார்கள்.


1 கொரி 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனினிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.


இப்படி தேவன் நமக்கு கொடுத்தவற்றை விட்டு கொஞ்சம் கூட விலகாமல் இருக்கவும் வேதாகமம் உபா 5:32 இன் மூலம் எச்சரிக்கிறது.


உபா 5:32 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.


இங்கு சாவதானமாயிருங்கள் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன என்று நமக்கு புரியாமலிருக்கலாம் அதற்கு பின்னால் வரும் விளைவுகளையும் ஆபத்துக்களையும் யோசித்து அதை செய்யாமலிருங்கள் என்று அர்த்தம். இந்த வசனத்தில் வலதுபுறம் இடதுபுறம் என்று ஒரு பாதையை சொல்வதுபோல் நம்மால் பார்க்க முடிகிறது. உண்மையில் நம் ஆத்துமாவிற்கான ஒரு வழி இருக்கிறது இதனை எரே 6:16 இல் நம்மால் உறுதி செய்ய முடிகிறது.


எரே 6:16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.


இப்படிப்பட்ட ஒரு பாதையையே தேவன் நம் ஆத்துமாக்களுக்காக தம்முடைய வசனங்கள் மூலமாய் ஏற்படுத்தி அதிலிருந்து விலகவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். இப்படி அவர் கொடுத்த வசனங்களிலிருந்து கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்றும் அப்படி கூட்டினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் வெளி 22:18,19 இலிருந்து நமக்கு தெளிவாகிறது


வெளி 22:18,19

  18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

 19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.


இதுவரை நீங்கள் ஒன்றை கவனித்திருப்பீர்கள் நாம் பார்த்த எல்லாவற்றிற்கும் வேத வசனங்களே நமக்கு விடை அளித்திருக்கும். ஏனென்றால் போதித்தலும் வேதாகமத்தின் வழியே தான் இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். இதை 1பேதுரு 4:11 இல் வாசிக்க முடிகிறது


1பேதுரு 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


இப்படியாக தேவனே மனிதனிடம் அவனுக்கு தேவை என்ன என ஆராய்ந்து நம்முடைய ஆத்துமாக்கக்களின் இளைப்பாறுதலுக்கு ஒரு வழியை நம்மிடம் கொடுத்து அதினோடே எதையும் சேர்க்க வேண்டாம், குறைக்கவும் வேண்டாம், இருப்பதை தாண்டி பேசவோ, செய்யவோ, உபதேசிக்கவோ ஏன் யோசிக்கவே வேண்டாம் என்று அவரே எச்சரிப்பும் தந்திருப்பதை பார்த்தோம்.

மேலும் தொடர்வதற்கு முன் மற்றுமொரு கேள்வி. நாம் ஏன் பலியிடுவதில்லை ? ஏன் விருத்தசேதனம் செய்வதில்லை? இயேசு கிறிஸ்து கூட செய்தாரே? ஏனென்றால்  கிறிஸ்தவர்களாகிய நாம் புதிய ஏற்பாட்டை பின்பற்றுகிறவர்கள் மற்றும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் அதை செய்யவில்லை என்று நம்மால் வேதத்திலிருந்து  பார்க்க முடிகிறது. இயேசு கிறிஸ்துவோ பழைய ஏற்பாட்டின் சட்டத்தின்படி வாழ்ந்தவர். அப்படி என்றால் வேதாகமத்தில் பழைய ஏற்பாடு நமக்கு எதற்கு?

இந்த கேள்விக்கும் வேதாகமத்திலிருந்தே நாம் விடையை பார்ப்போம். பழைய ஏற்பாடு

  • நமக்கு போதனையாக இருக்கிறதுஅதாவது பாடமாக இருக்கிறது (ரோமர் 15:4)
  • நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப் பட்டிருக்கிறது (1கொரி 10:11)

பழைய ஏற்பாட்டில் கடைபிடிக்கபட்ட சட்டங்களை நாம் கடைபிடிப்பதில்லை என்று மேலே தானே பார்த்தோம்? அப்புறம் எப்படி பழைய ஏற்பாட்டின் எச்சரிப்பு புதிய சட்டத்திற்கு ஒத்துபோகும்? என்கிறீர்களா?

எப்படியென்றால் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டிற்கு நிழலாய் இருக்கிறது என்று கொலோ 2:17 இலிருந்து நமக்கு தெரிகிறது. நிழல் என்றால் நிஜத்தின் பிம்பம் என்று தானே அர்த்தம் இப்படி நிஜமாய் எதிர்காலத்தில் வரப்போகும் புதிய ஏற்பாட்டின் சட்டத்திற்கு  நிழலாய் எச்சரிப்புகளை பழைய ஏற்பாட்டின் மூலம் தேவன் நமக்கு தந்திருக்கிறார்.

சரி அப்படி என்ன எச்சரிப்புகளை இந்த நிழல் நம் நிஜத்திற்கு வைத்திருக்கிறது என பார்ப்போம்.

எ.கா 1: எண்ணாகமம் 15:32-36

32-34 வாசிக்கும் போது இங்கு ஓய்வு நாளில் விறகு பொறுக்கின ஒரு மனிதனை கொண்டு வந்து என்ன செய்வதென்று தெரியாமல் அவனை காவலில் வைத்ததாக பார்க்கிறோம். ஓய்வு நாளில் எதுவும் செய்ய கூடாது என்று தேவன் பழைய ஏற்பாட்டு மக்களுக்கு கட்டளையிட்டிருந்தார் என்று நமக்கு தெரியும். இதை ஏசாயா 58:13 இல் திட்டவட்டமாக நம்மால் பார்க்க முடியும். ஆனால் அப்படி செய்பவர்களை என்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவு அவர்களுக்கில்லாமல் இருந்ததா?

உண்மையில் அவர்களுக்கு கட்டளையே இருந்தது என  யாத் 31:15,16 இலிருந்து நமக்கு தெரிகிறது.


யாத் 31:15,16

15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

16 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.


விறகு பொறுக்கினவனையுமா? எந்த மனிதனும் என்று மறுபடியுமாய் யாத் 35:2,3 இலும் நாம் பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் விறகு பொறுக்கினது அடுப்புக்கு தானே இருந்திருக்கும் ஆனால் இங்கு அடுப்பு மூட்டவும் வேண்டாம் என்றும் பார்க்கிறோம்.


யாத் 35:2,3

2 நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.

3 ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.


இவ்வளவு தெளிவான கட்டளையிருந்தும் ஏன் அவர்கள் அவனை காவல் பண்ணினார்கள்? ஏன் மோசேயும் கூட காத்திருந்திருக்கிறார். விறகு தானே பொறுக்கினான் என்று நினைத்திருக்கலாம் அல்லது என்னவேண்டுமானாலும் இருந்திருக்கலாம் ஆனால் தொடர்ந்து என்ன நடந்தது என பார்க்கலாம்.

எண்ணாகமம் 15:34-36 வாசிக்கும் போது அந்த மனிதன் நிச்சயமாக கொல்லப்படவேண்டும் என்று தேவன் தீர்மானிப்பதை காணலாம்.

எ.கா 2: லேவியராகமம் 10:1,2

இங்கு ஆரோனின் இரண்டு குமாரர்கள் தேவ சந்நிதியில் அந்நிய அக்கினியை கொண்டுவந்ததனால் கொல்லப்பட்டார்கள் என பார்க்கிறோம். அது என்ன அந்நிய அக்கினி என்கிறீர்களா? லேவியர்கள் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டிய விதத்தை முழுமையாய் தேவன் முன்னமே அவர்களுக்கு சொல்லியிருக்கிறார். இந்த நிகழ்வில் லேவி 16:12,13; 6:9,12,23 ஆகிய வசன பகுதிகளை வாசிக்கும்போது தூபகலசத்தை பலிப்பீடத்தின் அக்கினியால் நிரப்ப வேண்டும் என்றும் யாத் 30:9 இல் அந்நிய அக்கினியை கொண்டுவரக்கூடாது என்றும் முன்னமே அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு நெருப்புக்கா இவ்வளவு பெரிய தண்டனை? என யோசிக்கிறீர்களா? உண்மையில் தேவனுடைய சொல் ,செயல் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். நாம் முன்னமே பார்த்தது போல் இவை அனைத்தும் புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது. தன் பாவத்திற்காக பலி செலுத்த வரும் எந்த மனிதனும் பலியின் மீது தன் கையை வைத்து பலியை செலுத்த அது தகனிக்க படும். அவ்வாறு தகனிக்கப்படும் அக்கினியை தூபகலசத்தில் போட வேண்டும் அந்த வாசனை தேவசந்நிதிக்கு செல்லும். இது இயேசு கிறிஸ்துவின் பலியால் தன் பாவங்கள் போக்கினவனுடைய  ஜெபங்களே தேவ சந்நிதிக்கு செல்லும் என்ற ஒரு ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியுள்ளது.

இப்போது சொல்லுங்கள் அவர்கள் செய்த செய்கை இயேசுகிறிஸ்துவினுடைய பலியை அவமதிப்பது போல் ஆகும் தானே. இதற்காகவே அவர்கள் அன்று கொல்லப்பட்டார்கள். இன்றும் அநேக நேரங்களில் தேவ வசனத்தை மீறக்கூடாது, அதை மாற்றக்கூடாது என்று நமக்கு சொல்லப்படும்போது நமக்கு அதன் நோக்கம் புரிவதில்லை ஆனால் அவை அனைத்திலுமே ஆழ்ந்த கருத்து இருக்கும் என்று இந்த எடுத்துக்காட்டிலிருந்து நமக்கு தெளிவாகின்றது.

எ.கா. 3: 2சாமுவேல் 6:5-7

இங்கே நடப்பதை நாம் பார்த்தோமானால் தேவனுடைய பெட்டி கீழே விழப்போகுதே என்று சொல்லி ஊசா  பெட்டியை பிடிக்க தன் கையை நீட்டினதாய் பார்க்கிறோம். உடனே  தேவனுடைய கோபம் அவன் மேல் வந்து அவன் அங்கே இறந்து போனதாய் பார்க்கிறோம். இதில் என்ன தப்பு உள்ளது? தேவனுடைய பெட்டியின் மேலுள்ள அக்கறையில் தானே  ஊசா பிடிக்க போனார்?

இந்த வேலை யாருடையது என்று எண் 4:1-15 இலிருந்து நமக்கு தெரிகிறது. லேவி கோத்திரத்தில் வரும் கோகாத் புத்திரரை தவிர வேறு எவரும் அதை செய்யக்கூடாது என அவர்கள் கட்டளை பெற்றிருந்தார்கள். எனவே தேவன் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

எ.கா. 4: 1 சாமுவேல் 15:2-28

இந்த வசன பகுதியை வாசிக்கிறபோது இங்கு தேவன் சொன்னது ஒன்றாகவும் இவர்கள் செய்தது ஒன்றாகவும் தெரிகிறது. அதை செய்ததற்கு அவர்கள் அளித்த பதிலையும் நம்மால் பார்க்க முடிகிறது. தேவன் எல்லாவற்றையும் அழித்துவிட்டு வர சொன்னார் ஆனால் இவர்கள் முதல் தர விலங்குகளையெல்லாம் அழிக்க மனதில்லாமல் அவற்றை கொண்டுவந்ததுமில்லாமல் அவற்றை தேவனுக்காக தான் கொண்டுவந்தாகவும் சொல்வதை பார்க்கிறோம். ஆனால் அதை தேவன் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் சவுலினுடைய இராஜ்ஜியமே அவரை விட்டு எடுக்கப்பட்டது. இதிலிருந்து நாம் தேவனுக்காக எதை செய்தாலும் அதை அவர் சொன்னவாரே செய்யவேண்டும் என்றும் அதை மீறி நமது சுய யோசனையில் தேவனுக்கு நல்லது செய்வதாய் நினைத்து எதை செய்தாலும் அது பிரயோஜனமற்றது என்பதும் நமக்கு தெளிவாய் விளங்குகிறது.

இவ்வாறு வேதாகமத்திலிருந்து எதையும் கூட்டவும் கூடாது எதையும் குறைக்கவும் கூடாது எனவும் உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லவேண்டும் என்பதும் அதை மீறி யோசித்தாலே தவறுவோம் என்றும் இன்னும் அனேக நிகழ்வுகள் மூலமும் தேவன் நம்மை எச்சரிக்கிறார்.

இப்படி அவர் திரும்ப திரும்ப எச்சரித்திருக்கும் விஷயத்தை நாம் கைக்கொள்ளாமல் போவது எப்படி நியாயமாகும்? வேதாகமத்தை படிப்பதற்கே இவ்வளவு எச்சரிப்புகளா என்று பயப்படவோ யோசிக்கவோ வேண்டாம்! ஆனால் அதே சமயத்தில் தேவன் இப்படி நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார் என அறிந்துகொள்வது அவசியமானது தானே. எதையும் அறியாமல் புரியாமல் செய்வதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? அதற்காக தான் இந்த பதிவை ஏற்படுத்தினோம்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம்! உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் எங்களுக்கு கீழே கமென்டில் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு வேதாகமத்தை பற்றி கற்றுக்கொள்ள ஆசையா? எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி.

You may also like...

1 Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *