கிறிஸ்தவர்கள் இறால், சுறா, பன்றி இறைச்சி சாப்பிடலாமா?
இதென்னடா புது கதையா இருக்கு என பார்க்கிறீர்களா? உண்மையில் கிறிஸ்தவர்கள் இறால், சுறா, பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாமா? கூடாதா? என்னும் ஒரு கருத்தும் அதைப்பற்றின சந்தேகமும் அநேகரிடத்தில் இருக்கிறது. நாம் இதற்கும் வேதாகமத்திலிருந்தே விடையை பார்ப்போம்.
முதலாவதாக இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்னும் வசனம் எங்கிருக்கிறது? இதற்கான விடையை
வேவியராகமம் 11ஆம் அதிகாரம் நமக்கு தருகிறது. இந்த வசனப்பகுதியை பார்க்கும்போது எதை எதை சாப்பிடலாம், எதை எதை சாப்பிடக்கூடாது என ஒரு பட்டியலே இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த பட்டியலின் படி நிலத்தில் வாழ்பவைகளில் விரிகுளம்பு இல்லாதவைகளும், அசை போடாதவைகளும் உண்ணத்தகாதவை. தண்ணீரில் வாழ்பவைகளில் செதில்களும் சிறகுகளும் இல்லாதவை அனைத்தும் உண்ணத்தகாதவை. பறவைகளிலும், ஊர்வனவற்றிலும் உண்ணதகுந்தவை உண்ணத்தகாதவை என்ன என்ன என்றும் நாம் பார்க்கிறோம்.
அப்போது நாம் இவற்றில் எதையும் உண்ண கூடாது என்பது உண்மை தானா? என்கிறீர்களா! இந்த முடிவுக்கு வரும் முன்னர் முதலில் இந்த பட்டியல் யாருக்கு கொடுக்கப்பட்டது என நாம் பார்ப்பது மிக அவசியமாக உள்ளது. வேதத்தில் எந்த கட்டளையும் யாருக்கு கொடுக்கப்படுகிறது என நாம் பார்ப்பது மிக முக்கியமானது.
உதாரணமாக ஆதியாகமம் 12:1 இல் நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ என தேவன் ஆபிரகாமுக்கு சொன்னதை பார்க்கிறோம். ஆபிரகாம் அவர் சொல் கேட்டு சென்றதும் நமக்கு தெரிந்த விஷயமே. ஆனால் இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. தேவன் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்று சொல்லியிருக்கிறார் எனவே நாம் அனைவரும் கிளம்புவோம் வாருங்கள் என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் எப்படியிருக்கும்? அது ஆபிரகாமுக்கு சொல்லியிருக்கிறார் அவரும் அவர் சொல் கேட்டு சென்றார் அது நமக்கு வேதாகமம் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது இது நமக்கு கிடையாது என நாம் அவருக்கு பதில் கூறுவோம் இல்லையா!
ஆதி 12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
(அப்படியானால் எவையெல்லாம் நமக்கு என எப்படி தெரிந்து கொள்வது? என யோசிக்கிறீர்களா? இதை பற்றி மற்றொரு பதிவில் காண்போம்.)
இப்படி தேவன் கட்டளையாக வேதாகமத்தில் கூறியிருக்கும் விஷயங்கள் யாருக்கு கூறப்பட்டது என்று அறிந்து கொள்வது மிக அவசியமாக இருக்கிறது. எல்லாம் எல்லாருக்கும் கிடையாது என்று மேல் கண்ட உதாரணத்தில் நாம் பார்த்தோம். இந்த பிரகாரமாக இந்த உணவு பற்றின கட்டளையும் யாருக்கு என பார்த்தால்
லேவியராகமம் 11:1,2 வசனங்களில் இது மோசே மூலமாக இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது என்று நமக்கு தெரிகிறது. அப்போ, கிறிஸ்தவர்களுக்கு இது இல்லையா? இதையும் வேதாகமமே நமக்கு கூறுகிறது.
லேவியராகமம் 11:1,2
அப்போஸ்தலர் 10:10-16 ஐ வாசிக்கும்போது இங்கு ஒரு நிகழ்ச்சியை வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துகிறது.
அப்போஸ்தலர் 10:10-16
இங்கு அப்போஸ்தலனாகிய பேதுரு ஒரு தரிசனம் காண்கிறதாயும் அதிலே அசுத்தமும் அசுத்தமில்லாததுமான சகல மிருகங்களை புசிக்க சொல்லப்படுகிறதாயும் நாம் பார்க்கிறோம். பேதுரு ஒரு யூதன் அவர் லேவி 11ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்த அசுத்தமான மிருகங்களை சாப்பிடக்கூடாது என சிறு வயது முதல் கற்பிக்கப்பட்டவர் அதனால் இப்போதும் அவர் அவைகளை உண்ண மறுக்கிறதை நம்மால் காணமுடிகிறது. ஆனாலும் இங்கு தேவன் அசுத்தத்தை சுத்தமாக்கிவிட்டார் என்று அவருக்கு கூறப்படுகிறது.
இதிலிருந்து நமக்கு ஒன்று தெரிய வருகிறது. தேவன் ஏன் முதலில் அசுத்தம் என சில மிருகங்களை பிரித்து அவற்றை சாப்பிட வேண்டாம் என இஸ்ரவேலருக்கு கட்டளையிட்டார்? என்ற கேள்விக்கு இந்த பகுதி பதில் தருகிறது. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டிற்கு நிழலாய் இருக்கிறது என எபிரெயர் 10:1 இல் நாம் வாசிக்கிறோம்
எபிரெயர் 10:1
10:1 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
இதன் படி எப்படி மிருகங்கள் பிரித்துவைக்கப்பட்டதோ அதே போன்று இஸ்ரவேலரும் மற்ற மக்களும் இயேசு கிறிஸ்து வரும் வரை பிரித்து வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வந்த பிறகு இந்த பிரிவு இல்லாமல் போகும் என்பதற்கு அடையாளமாக அன்று இஸ்ரவேலருக்கு இது கொடுக்கப்பட்டிருக்கிறது என நமக்கு புரிய வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இது இப்போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு இல்லை என்றும் நமக்கு தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல் அப்போஸ்தலர் 15:20 இல் உணவு விஷயத்தில் அசுத்தமானதை சாப்பிட வேண்டாம் என்று அப்போஸ்தலர்களும் தீர்மானிக்கவில்லை என்றும் பார்க்கிறோம்.
அப்போஸ்தலர் 15:20
15:20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் ரோமர் 14:14 இல் ஒரு பொருளும் தீட்டுள்ளது அல்ல என்றும் அதை விருப்பமுள்ளவர்கள் உட்கொள்ளலாம் என்றும் விருப்பமில்லாதவர்களுக்கு தான் அது தீட்டுள்ளது என்றும் பவுல் கூறுவதை பார்க்கிறோம்.
ரோமர் 14:14
14:14 ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
ரோமர் 14:20 எந்த உணவும் சுத்தமானது என்றும் அதை உண்ணுவதும் உண்ணாததும் ஒருவரின் விருப்பத்தை பொறுத்தே இருக்கிறது என்றும் நம் உணவு முறைகளை வைத்து தேவனை பிரிய படுத்த முடியாது என்றும் நமக்கு தெள்ளத்தெளிவாய் தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டின் சட்டத்தின் படி போஜன பதார்த்தத்தின் மூலம் தேவனிடம் சேர முயற்சி செய்தும் அடையாமல் போனார்களென்றும் புதிய ஏற்பாட்டின் சட்டம் போஜனபதார்த்தத்தின் மூலமல்ல கிருபையினால் உண்டாயிருக்கிறது என்றும் போஜனத்தால் தேவனை பிரியபடுத்த முடியாது என்றும் நமக்கு எபிரெயர் 13:9 மூலம் வேதாகமம் நமக்கு தெரிவிக்கிறது.
ரோமர் 14:20
14:20 போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.
எபிரெயர் 13:9
இதையே இன்னும் தெளிவாக 1 கொரிந்தியர் 8:8 வசனம் நமக்கு விளக்குகிறது. இப்போது நீங்களே இதற்கான விடையை அடைந்திருப்பீர்கள். ஆம் நீங்கள் நினைப்பது சரி தான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு இரத்தத்தை தவிர வேறு எந்த உணவுகளையும் சாப்பிடக்கூடாது என்ற சட்டமோ, கட்டளையோ கிடையாது.
1 கொரிந்தியர் 8:8
8:8 போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
இதுமட்டுமல்லாது தேவன் எதை சொன்னாலும் அதை யாருக்கு சொல்கிறார் என தெரிந்து கொள்வது அவசியம் என்றும் புதிய ஏற்பாட்டின் சட்டம் ஆவிக்குரியது என்றும் இந்த தலைப்பின் மூலம் நமக்கு தெரிய வந்திருக்கிறது.
இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம்! உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் எங்களுக்கு கீழே கமென்டில் தெரியப்படுத்துங்கள். இது போன்ற சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கிறதா? அதையும் எங்களிடம் கேளுங்கள்.
உங்களுக்கு வேதாகமத்தை கற்றுக்கொள்ள ஆசையா? எங்களை தொடர்புகொள்ளுங்கள்!
நன்றி!

Super
நன்றி மாதவன் ஜோஷுவா! மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள். சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அதனை எங்களுக்கு தெரிய படுத்தலாம். கண்டிப்பாக உதவ முயல்வோம்.
Enaku ippo palaiyerpadu kalathula enna sapudalam,enna sapuda kudathu atha sollunga clear pannunga anna
நிச்சயமாக சகோதரி, நான் உங்களுக்கு சொல்வதை விட வேதமே சொல்லுகிறதே. ஆம் லேவியராகமம் 11 ஆம் அதிகாரத்தினை பாருங்கள் அதில் இருக்கிறது எல்லாம்.
ஞானஸ்நானம் பற்றிய செய்தி போடுங்கள் சகோதரரே
இரட்சிக்கபட்டு ஞானஸ்நானமா? ஞானஸ்நானம் எடுத்தவர்கள் எப்படி ஜீவிக்க வேண்டும்?