இந்த இரகசியம் பெரியது!
பொதுவாக வேதாகமத்தில் நிறைய இரகசியங்கள் உள்ளன. நாம் வேதாகமத்தை மேலோட்டமாய் படிக்கும்போது இவை நமக்கு புலப்படுவதில்லை. கூர்ந்து கவனிப்பதாலும், வேதாகமத்திலிருக்கும் பழக்கம் மற்றும் ஆர்வம் ஆகியவற்றை கொண்டும் அவை நமக்கு வெளிப்படுகின்றன.
இப்படி வேதாகமத்தில் வெளியரங்கமாய் மறைந்திருக்கும் இரகசிய பகுதி ஒன்று இருக்கிறது. அது எபேசியர் 5:22-33 வரை இருக்கும் வசனப்பகுதி தான். பொதுவாக கிறிஸ்தவ திருமணங்களில் மணமக்களுக்கு அறிவுரையாக பேசப்படும் பகுதி இது. இந்த பகுதியை பற்றின இரகசியத்தை தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.
எபேசியர் 5:22-33
22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
23 கிறிஸ்து சபைக்குத்
தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத்
தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும்
இரட்சகராயிருக்கிறார்.
24 ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு
எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
25 புருஷர்களே,
உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே
கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
26 தாம் அதைத்
திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
27 கறைதிரை
முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத்
தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து,
அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில்
அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
29 தன் சொந்த
மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப்
போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக்
காப்பாற்றுகிறான்.
30 நாம் அவருடைய
சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய
எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
31 இதினிமித்தம்
மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன்
இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
32 இந்த இரகசியம்
பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும்
சொல்லுகிறேன்.
33 எப்படியும்,
உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும்
புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
இந்த வசனப்பகுதி மொத்தமாய் நமக்கு தெரிந்தாலும் இதை சற்று கூர்ந்து கவனித்தால் இதனை தனித்தனி பகுதிகளாக பிரிக்கலாம். ‘அப்படி என்ன பிரிக்க இருக்கிறது இதில் என யோசிக்கிறீர்களா?’ உண்மையில் அப்படி பிரித்தால் தான் அந்த இரகசியம் தெரிய வரும். இப்பகுதியில் நான்கு கதாபாத்திரங்கள், இரண்டு பிரிவுகளாய், ஒரே நோக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
4 கதாபாத்திரங்கள்: இந்த வசனப்பகுதியில் நான்கு கதாபாத்திரங்கள் உள்ளன. அவையாவன:
- கிறிஸ்து
- சபை
- புருஷன்
- மனைவி
2 பிரிவுகள்: இந்த நான்கு கதாபாத்திரங்களையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
- கிறிஸ்து-சபை
- புருஷன் – மனைவி
1 நோக்கம்: இந்த இரண்டையும் ஓரே நோக்கத்தில் அடக்கலாம் அது : தலை – சரீரம்.
இப்படி அழகாய் அமைந்திருக்கும் இந்த பகுதியை பொதுவாக பயன்படுத்தும் அனைவரும் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இந்த பகுதி அதை பற்றி மட்டும் பேசும் பகுதி அல்ல.
இதை புரிந்துகொள்ள இதன் நோக்கத்தை பார்ப்போம். இதன் நோக்கம் – தலை/சரீரம். இதை குறித்து எபேசியர் 5:31 இல் வாசிக்கும் போது மனைவியும் கணவனும் ஒரே சரீரமாய் இருப்பார்கள் என்று இந்த வசனம் குறிப்பிடுவதை நாம் பார்க்கிறோம்.
தலை-சரீரம்
- ஒரே சரீரமாயிருந்தாலும் தலை சரீரத்தை இரட்சிக்கிறது. அதாவது தலையானது சரீரத்தை காப்பாற்றுகிறது எபே 5:23
- தலையானது சரீரத்தில் அன்பு கூறுகிறது எபே 5:25
- தலை அன்புகூர்ந்து தம்மை தாமே சரீரத்திற்காக ஒப்புக்கொடுக்கிறது 5:27
- தலை சரீரத்தை தன் சொந்தமாய் பாவிக்கிறது 5:28
- தலை சரீரத்தை பகைக்காமல் மாம்சத்தை போஷித்து காப்பாற்றுகிறது 5:29
- சரீரமானது தலைக்கு கீழ்படிகிறது எல்லா விஷயத்திலும் 5:24
- இவை இரண்டும் சேர்ந்து ஒரே மாம்சமாக இருக்கிறது 5:31
நாம் மேலே பார்த்த இந்த 7 காரியங்களும் அறிவியல் பூர்வமாக நடப்பது தான். அறிவியலா? அப்போ இவ்வளவு நேரம் அறிவியல் பற்றியா பேசினீர்கள்? என்ற கேள்வி எழுவது பொதுவானது தான். ஆனால் இங்கே நாம் மனித உயிரியல் என்ற அனைவருக்கும் தெரிந்த அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றினை கொண்டு அந்த இரண்டு பிரிவுகளையும், நான்கு கதாபாத்திரங்களையும் நமக்கு புரியவைக்கிறது.
இப்போது இந்த நோக்கத்தினை வைத்தே அந்த இரு பிரிவுகளையும் அந்த பிரிவுகளின் கீழ் உள்ள கதாபாத்திரங்களையும் வேதாகமம் எப்படி வகைப்படுத்துகிறது என பார்ப்போம்.
புருஷன்-மனைவி
முதலாவது தலை-சரீரம் என்பது தேவனால் அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை(Pattern) இதனை நம்மால் மாற்றி அமைக்க முடியாது. இது நம் எல்லாருக்குமே தெரியும். உதாரணமாக தலையிலிருந்து தான் உடலுக்கு எந்த வேலைக்கும், செயலுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. மாறாக உடலானது தலைக்கு கட்டளைகள் பிறப்பிக்கிறது இல்லை, அப்படி நம்மால் மாற்றியமைக்கவும் முடியாது. இதை போன்றது தான் கணவன்-மனைவி பந்தமும் தேவனால் அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை இதை மாற்றி அமைப்பது என்பது சரீரத்திலிருந்து தலைக்கு கட்டளைகள் பிறப்பிக்க முயல்வதை போன்றது.
புருஷனின் பங்கு
கணவன்மார்கள் இந்த-இந்த கடமைகளை செய்ய வேண்டும் என வேதாகமம் கூறுகிறது

- புருஷர்கள் தலையாக இருக்க வேண்டும்
- மனைவியாகிய சரீரத்தை காப்பாற்ற/பாதுகாக்க வேண்டும்
- மனைவியிடத்தில் அன்புகூற வேண்டும்
- மனைவி சுத்தமாயிருப்பதற்கும், குறையில்லாமலிருப்பதற்கும் தன்னையே ஒப்புக்கொடுக்க வேண்டும்
- மனைவியை தன் சொந்த மாம்சம்போல் நினைத்து, நடத்தவேண்டும்
- மனைவியை பகைக்காமல், போஷித்து காப்பாற்ற வேண்டும்
இவை அனைத்தும் கூறி, மனைவி கணவனின் மாம்சம் என்றும் தலையும் சரீரமும் சேர்ந்து ஒரே உடலாய் இருப்பதுபோல நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரே மாம்சமாயிருக்கிறீர்கள் என்றும் வேதாகமம் கணவன்மார்களுக்கு புத்தி சொல்லுகிறது.
மனைவியின் பங்கு
கணவன்மார்களுக்கு சொல்லியது போல மனைவிமார்களுக்கும் சில கடமைகளை வேதாகமம் வைக்கிறது.
- மனைவிகள் தலைக்கு அதாவது புருஷருக்கு கீழ்படியவேண்டும்(5:22)
- சொந்த புருஷருக்கு கீழ்படியவேண்டும் எந்த விஷயத்திலும் (5:24)
- புருஷர்களிடத்தில் பயபக்தியாய் இருக்க வேண்டும்(5:33)
இப்படியாய் மனைவிகளின் பங்கினை பற்றி வேதாகமம் சொல்லுகிறது. ஆனால் இங்கு நாம் வேறு ஒரு வசனத்தையும் சேர்த்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கீழ்படிந்திருக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்கிறோம். அந்த வசனம் எபே 5:21. இதற்கு மேலிருக்கும் வசனப்பகுதியை பார்த்தால் அது கணவன் மனைவி பற்றி பேசவில்லை என்பது நன்றாக புரியும்.
கிறிஸ்து-சபை
நாம் முன்னமே பார்த்தாற்போல் வேதாகமம் தலை-சரீரத்தை வைத்து கிறிஸ்து-சபை உறவையும் விளக்குகிறது.
கிறிஸ்து
- கிறிஸ்து சபைக்கு தலையாயிருக்கிறார்.
- சபையை இரட்சிக்கிறார்
- சபையின் மீது அன்புவைத்து, தண்ணீர்முழுக்கினால் கரை/அழுக்கு, திரை/சுருக்கம் எதுவும் இல்லாமல் பரிசுத்தமாயும், பிழையற்றதுமாய் ஆக்க தம்மைதாமே ஒப்புக்கொடுத்தார்.
- சபை கிறிஸ்துவின் சொந்த சரீரமாக இருக்கிறது.
- சபையை பகைக்காமல் போஷித்து, காப்பாற்றுகிறார்.
சபை
- சபையானது எந்த காரியத்திலும் கிறிஸ்துவுக்கு கீழ்படிய வேண்டும்.
- கிறிஸ்துவினிடத்தில் பயபக்தியாய் இருத்தல் வேண்டும்
இதிலிருந்து வேதாகமம் கிறிஸ்து-சபை உறவை கணவன்-மனைவி உறவுடன் சம்பந்தப்படுத்திக்காட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் கணவன்-மனைவி உறவில் தேவன் தந்த திட்டத்தை மாற்றியமைக்க நினைப்பது கிறிஸ்து-சபை உறவையும் மாற்றியமைக்க நினைப்பதாய் ஆகிவிடும் என்னும் ஒரு ஆழ்ந்த கருத்தையும் நாம் நினைவில் கொள்வது அவசியம். ஏனென்றால் இவை அனைத்திற்குமே தொடர்பு இருக்கிறது என நாம் முன்னமே பார்த்தோம் இதில் ஒன்றை மாற்ற நினைத்தாலும் அனைத்துமே மாறும் ஏனென்றால் இவை அனைத்துமே தேவனுடைய திட்டம் என்கிற மையப்புள்ளியில் ஒன்றாக ஆகிறது.
இவை ஒரு பக்கமிருந்தாலும் இதில் இன்னொரு தகவலும் மறைந்திருக்கிறது. அதை வெளிகொண்டு வர இந்த வசனப்பகுதியை இன்னும் சற்று கூர்ந்து வாசிக்க வேண்டி இருக்கிறது. அப்படி வாசித்தால் இங்கு புருஷர்கள்-மனைவிகள் என பன்மையில் இருப்பதை பார்க்கலாம். அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட தம்பதியரை வேதாகமம் குறிப்பிடுவதை பார்க்கலாம்.
‘இது பொதுவானதுதானே கிறிஸ்தவர்களில் அநேக தம்பதியர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் அவர்களை பொதுவாய் குறிப்பிட பன்மையை கையாண்டுள்ளது! இதற்கா மறுமுறை கூர்ந்து படிக்க சொன்னீர்கள்?’ என்கிறீர்களா? நீங்கள் சொல்வது சரியே இது பொதுவானது தான் ஆனால் இதற்காக மட்டும் நாம் கூர்ந்து கவனிக்கவில்லை தம்பதியரை பன்மையில் பேசிய வேதாகமம், கிறிஸ்து-சபை என இந்த இரண்டு கதாபாத்திரங்களை ஒருமையில் பேசுகிறது.
நாம் முன் பார்த்தது போல கிறிஸ்து கணவனாக இருந்தால் அவருக்கு சபையாகிய ஒரே மனைவி தான் இருக்க வேண்டும், கிறிஸ்து தலையாக இருந்தால் அவருக்கு ஒரே சரீரமாகிய சபை தான் இருக்க வேண்டும். இப்போது சொல்லுங்கள் ஒரே சபையா இருக்கிறது? இன்று உலகளவில் இரண்டு லட்சத்திற்கும் மேலான பிரிவுகள்(சபைகள்) உள்ளன. கணவன் மனைவி உறவை ஏற்றுக்கொள்ளும் நாம், கிறிஸ்து-சபை உறவை ஏற்றுக்கொள்ளும் நாம், தலை சரீரம் உறவை ஏற்றுக்கொள்ளும் நாம் இதை ஏற்கிறோமா?
அப்படி என்றால் சில கேள்விகளுக்கு நம்மிடம் விடை இருக்கிறதா என பார்ப்போம்.
- தலையாகிய கிறிஸ்துவுக்கு ஒரே சரீரம் (சபை) என வேதாகமம் சொல்லுகிற நிலையில் இத்தனை சரீரங்கள்(சபைகள்) எப்படி?
- தலையாகிய அந்த கிறிஸ்துவுக்கு யார் மனைவி?
- அப்படி எல்லா சபையும் அவருடையதே என்றால், இங்கு தேவனின் திட்டத்தை மாற்றி நாம் தேவனைவிட பெரியவர்கள் என சொல்கிறோமா?
- இல்லை ஒரு சபை தான் என்றால் எந்த சபை அது? இதை வேதாகமத்திலிருந்து நம்மால் சான்றுடன் கூற முடியுமா?
இவ்வாறு நம்மை வேதாகமம் சிந்திக்க வைக்கிறது. இதை தான் பவுல் எபே 5:32 இல் இந்த இரகசியம் பெரியது என கூறுகிறார். இப்படி வேதாகமம் நாம் கவனிக்காத அநேக விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த பதிவின் மூலம் கிறிஸ்து-சபை, கணவன்-மனைவி பற்றியும் இவர்களின் பந்தத்தை தலை-சரீரம் வைத்தும் நாம் தெளிவாய் பார்த்தோம்.
இவற்றின் பதில்களையும், இவற்றை போன்ற மற்ற வேத இரகசியங்களையும் வேத வசனங்களோடு உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆசையா? எங்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த பதிவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கீழே கமென்டின் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Brilliantly explained the great mystery.