தேவன் ஏன் ஆபிரகாமை அழைத்தார்?

வேதாகமத்தில் ஒரு மிக முக்கியமான நபர் ஆபிரகாம். இவர் வேதத்தின் துவக்கத்திலிருந்தே நம்முடன் பயணிக்கும் ஒரு நபர் , விசுவாசத்திற்கு பேர் போனவர் (ஆதி 22), விசுவாசிகளுக்கு தகப்பன் (ரோமர் 4:12) என்றும், தேவனுடைய சிநேகிதன் (யாக்கோபு 2:23) என்றும் வேதமே இவருக்கு பட்டங்களையும் கொடுத்திருக்கிறது.

எல்லாம் சரி, அது ஏன் தேவன் ஆபிரகாமை அழைத்தார்? என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கிறதா? பொதுவாக வேதத்தை படிக்க துவங்கும் அநேகருக்கு எழும்புகிற கேள்வி தான் இது. இதற்கு விடை என்ன? பார்ப்போம் வாருங்கள்

ஆதி 12:1 இல் தேவன் ஆபிரகாமை கூப்பிடுகிறதை பார்க்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் ஆதி 11ஆம் அதிகாரத்தில் அவருடைய குடும்ப வரலாறே கொடுக்கப்பட்டிருக்கிறதே இது எதற்காக என பார்த்திருக்கிறோமா? இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. தேவன் ஆபிரகாமின் குடும்பத்தையே கவனிக்கிறாரா?


ஆதி 12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.


இதில் என்ன இருக்கிறது? தேவன் எல்லாரையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறாரே! அதற்கான விடையை நீங்களே போக போக தெரிந்து கொள்வீர்கள்.

ஆதியாகமத்தில் அவருடைய ஊர் – ஊர்(கல்தேயர் தேசம்) என்று மட்டும் தான் தெரிகிறது. ஆனால் யோசுவா 24: 2,3 இல் சுவாரஸ்யமான வேறொரு விஷயம் நமக்கு தெரிகிறது. ஆபிரகாமின் தகப்பன்(வீட்டார்) வேறு தேவர்களை சேவித்தனர் என தெரிகிறது.

2   அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.

3   நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.

யோசுவா 24: 2,3

என்ன? அந்நிய தேவர்களை பின்பற்றின ஒரு குடும்பத்திலிருந்தா தேவன் ஆபிரகாமை அத்தனை பெரிய மக்கள் கூட்டத்துக்கும், ஏன் இன்றைக்கு விசுவாசிகளாயிருக்கும் நமக்கும் தகப்பனாக இருக்கும்படியும், உலக இரட்சகரே அவருடைய சந்ததியில் வரும் படியாகவும்(மத் 1: 1) ஒரு பெரிதான ஸ்லாக்கியத்திற்கு அழைத்தார்? என யோசிக்கிறீர்களா? நீங்கள் யோசிப்பதில் தவறில்லை. ஆனால் சற்று பொறுங்கள்

அவருடைய குடும்ப பின்னணியை சொன்ன வேதாகமம் தான் நெகே 9:7,8 இன் மூலம் கல்தேயாவிலிருந்து வர சொன்ன தேவன் சும்மா அவரை அழைக்கவில்லை; ஆபிரகாம் தேவனுடைய பார்வைக்கு முன்பாக உண்மையான இருதயமுடையராய் இருந்தார் எனவும் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

7   ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.

8   அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.

நெகேமியா 9: 7,8

எந்த அளவிற்கு உண்மையாக இருந்தார் என்றால் உண்மையான தேவனையும், அவருடைய கட்டளைகளையும் காத்துக்கொள்ளும் படிக்கும், அப்படி செய்வதே சரியான நீதி-நியாயம் என்பதால் அதை செய்யவும் தன் பிள்ளைகளுக்கும், தன் வீட்டாருக்கும் கட்டளையிடும் அளவுக்கு அவருடைய இருதயம் உண்மையாயும், உண்மையை நோக்கியும் இருந்திருக்கிறது. இதை தான் தேவன் பார்த்தார். இதனை ஆதி 18:19 இல் நம்மால் தெளிவாய் பார்க்க முடிகிறது.

9  கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆதி 18:19

இப்படி விக்கிரகத்தை பின்பற்றின ஒரு குடும்ப பின்னணியிலிருந்தும், தேவனுடைய கண்களுக்கு முன்பாக உண்மையான இருதயம் உடையவராய், தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையே உண்மையான வழிக்கு நடத்தக்கூடியு ஒரு மனிதராய் ஆபிரகாம் இருந்தார்.

‘இது சரி இதற்கும், தேவன் அவரை கவனிக்கிறதை குறித்து நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்று சொல்லியிருந்தீர்களே அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” என நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. இதற்கான விடை 2நாளாகமம் 16:9 இல் நமக்கு கிடைக்கிறது.

2நாளாகமம் 16:9  தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது;…

இப்படிப்பட்ட உண்மையான இருதயம் கொண்டிருந்த ஆபிரகாமுக்கு தன் வல்லமையை விளங்கப்பண்ணும்படி தான், தேவன் ஆபிரகாமை அழைத்தார் என்று இந்த வசனத்திலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஓஹோ! சரி அப்போ ஆபிரகாம் தன்னுடைய கிரியைகளில் தான் அழைக்கப்பட்டாரா? கிருபையிலில்லையா என அடுத்த கேள்விக்கு நம் மனம் தயாராகும். இந்த கேள்விக்கும் வேதத்தில் பதிலிருக்கிறது. இதை பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்

இவற்றை போன்ற மற்ற வேத இரகசியங்களையும் வேத வசனங்களோடு உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆசையா? எங்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த பதிவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கீழே கமென்டின் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

இதை தவிற வேதத்தில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கின்றதா? இடப்பக்கத்திலுள்ள WhatsApp ஐக்கானை கிளிக் செய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *