வேதாகமத்தில் எத்தனை வகையான உபதேசங்கள் இருக்கின்றன என உங்களுக்கு தெரியுமா?
வேதாகமத்தில் நால்வகையான உபதேசங்கள் உள்ளன என சொன்னால் நம்புவீர்களா? என்ன நான்கா என ஆச்சர்யமாக இருக்கிறதா? பொதுவாக நம்மில் அநேகருக்கு தெரிந்திருப்பது கிறிஸ்துவின் உபதேசம் தான் (2 யோவான் 1:9). ஆனால் உண்மையில் வேதாகமத்தில் நான்கு உபதேசங்கள் உள்ளன.
நான்கு உபதேசங்கள்:
- நியாயப்பிரமாண உபதேசம்
- இயேசுவின் உபதேசம்
- கிறிஸ்துவின் உபதேசம்
- சாத்தானின் உபதேசம்
வாருங்கள் இவற்றில் அப்படி என்ன தான் வித்தியாசங்கள் உள்ளன? கிறிஸ்தவர்களாகிய நாம் எதை பின்பற்ற வேண்டும்? ஏன்? என்ற கேள்விகளுக்கும் இந்த உபதேசங்கள் யார் மூலமாய் கொடுக்கப்பட்டது, எப்போது கொடுக்கப்பட்டது, யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
நியாயப்பிரமாண உபதேசம்
இதனை ரோமர் 2:18 இல் நாம் காணலாம்
ரோமர் 2:18 நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே
என பவுல் யூதர்களுக்கு சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இது எங்கிருந்து துவங்கியது? எங்கு முடிகிறது? என பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். இதனை சுருக்கமாக கீழே பார்ப்போம்.
உபதேசத்தின் துவக்கம்:
இந்த உபதேசம் யாத்திராகமம் 19:3 இல் தேவன் மோசேயை சீனாய் மலையின் மேல் அழைப்பதிலிருந்து துவங்குகிறது.
பெயர்:
நியாயப்பிரமாணம் என்கிற பெயர் முதல் முதலாக யாத் 24:12 இலிருந்து தான் ஆரம்பிக்கிறது.
யாத் 19:3 மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
யாத் 24:12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
யார் மூலமாய் கொடுக்கப்பட்டது:
மேற்கண்ட இரு வசனங்களிலிருந்து நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் தான் மக்களுக்கு வந்தடைந்தது என நமக்கு தெளிவாகிறது.
நியாயப்பிரமாணத்தின் சில அம்சங்கள்:
நியாயப்பிரமாணத்தில் 600க்கும் மேற்பட்ட சட்டங்கள் இருக்கின்றது அவற்றுள் சில முக்கியமான அம்சங்களை கீழே பார்ப்போம்.
- பண்டிகைகள்
- ஓய்வுநாள்
- இசை
- தசமபாகம்
- ஆசரிப்பு கூடாரம், தேவாலயம்
- பலிகள்
இவை அனைத்துமே நமக்கு இன்று பரவலாக தெரிந்திருக்க கூடியவை தான். இது நம்மை அடுத்த கேள்விக்கு தள்ளுகிறது. இந்த சட்டங்கள் அல்லது உபதேசம் யாருக்கு?
யாருக்கு கொடுக்கப்பட்டது:
நியாயப்பிரமாணம் யாருக்கு கொடுக்கப்பட்டது? அல்லது நியாயப்பிரமாண உபதேசம் யாருக்கு கொடுக்கப்பட்டது அதனை யார் பின்பற்ற வேண்டும்? இதற்கு விடை இந்த உபதேசத்தின் துவக்கத்திலேயே காணப்படுகின்றது அதாவது யாத் 19:3 இல் இது இஸ்ரவேலருக்கு என தெளிவாய் குறிப்பிட்டுள்ளது. இதை யாத் 21:1, யாத் 25:22, 27:21, 30:31, 31:13, 31:16, 35:1,4, லேவி 1:2, 4:2, உபா 4:44 வசனங்களிலும் இன்னும் அநேக வசனங்களிலும் நம்மால் காணமுடியும்.
முடிவு:
‘நியாயப்பிரமாணம் முடிந்து விட்டதா?’ என யோசிக்கிறீர்களா? ஆம் நியாயப்பிரமாணம் முடிந்து விட்டது. இதனை ரோமர் 10:4 இல் நம்மால் பார்க்க முடியும். இயேசுகிறிஸ்துவுடன் நியாயப்பிரமாணமும் முடிகிறது என இந்த வசனம் நமக்கு தெளிவாய் உணர்த்துகிறது.
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
ரோமர் 10:4
இது நமக்கு வேறு ஒரு கேள்வியை எழுப்புகின்றது. ‘ இவையெல்லாம் இஸ்ரவேலருக்கு என்றால், நாம் இவற்றை பின்பற்ற கூடாதா? ‘ இதற்கான விடையை நாம் கீழே பார்ப்போம்.
நோக்கம்:
கிறிஸ்துவின் உபதேசத்தின் காலம் வரும்வரை இஸ்ரவேலரை காக்கவும், அவர்களை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தவும் கொடுக்கப்பட்ட தற்காலிகமான உபதேசம் இது என்பதை கலா 3:19, 3:24 வசனங்களின் மூலம் வேதாகமம் நமக்கு மிக தெளிவாய் தெரியப்படுத்துகிறது.
கலா 3:19, 3:24
3:19 அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.
3:24 இவ்விதமாக, நாம் விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
இயேசுவின் உபதேசம்
இயேசுவின் உபதேசத்தை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் புத்தகங்களில் நம்மால் காணமுடிகிறது. ஆனால் அவர் என்ன உபதேசம் செய்தார்? அதற்கு முதலில் இயேசு எந்த சட்டத்தின் கீழ் வாழ்ந்தார் என நாம் தெரிந்து கொள்ளவது அவசியமானது. நீங்களே சொல்லுங்கள் இயேசு புதிய ஏற்பாட்டின் சட்டத்தின் கீழ் பட்டவரா? அல்லது பழைய ஏற்பாட்டு சட்டத்தின் கீழ் பட்டவரா?
இதற்கான பதில்: இயேசு பழைய ஏற்பாட்டு சட்டத்துக்கு உட்பட்டிருந்தார். ஆம் அவருடைய வாழ்கை நமக்கு புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர் பழைய ஏற்பாட்டின் சட்டத்தில் அதாவது நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் தான் வாழ்ந்தார். ‘எப்படி கூறுகிறீர்கள்?’ என கேட்கிறீர்களா? புதிய ஏற்பாட்டின் சட்டம் அதாவது சுயாதீன பிரமாணம்(யாக் 2:12) அவருடைய மரணத்தில் தான் அமலுக்கு வருகிறது(இதனை பற்றி கீழே பார்ப்போம்). அவர் வாழ்ந்த காலத்தில் வேறு எந்த பிரமாணங்களும் கிடையாது. எனவே அவர் நியாயப்பிரமாணத்தின் கீழ் தான் வாழ்ந்தார் என நமக்கு தெளிவாகிறது.
துவக்கம்:
இயேசுவின் உபதேசம் மத் 4:17 இலிருந்து அதாவது அவர் ஞானஸ்நானம் எடுத்ததிலிருந்து துவங்குகின்றது.
மத் 4:17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
பெயர்:
இயேசுவின் உபதேசம் என நேரடியாக இல்லாமலிருந்தாலும் மத் 4:23இல் அவர் உபதேசித்தது நமக்கு தெளிவாகிறது. இதனை நாம் மத் 5:2, 9:35, 11:1, 13:54 போன்ற மற்றும் அநேக வசனபகுதிகளில் பார்க்க முடியும் . அதுமட்டுமல்லாமல் யோவான் 8:31,37,43 போன்ற வசனங்களில் ‘என் உபதேசம் என்றும் இயேசு சொல்வதை நம்மால் பார்க்க முடியும்.
மத் 4:23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
யோவான் 8:31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
யார் மூலமாய் இது கொடுக்கப்பட்டது:
இதற்கான விடையை நீங்கள் எப்போதோ கணித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம் இது இயேசுவானவரால் கொடுக்கப்பட்டது.
அவர் என்னத்தை உபதேசித்தார்?
அவர் இங்கு இரண்டு உபதேசங்களையும் சேர்த்து பிரசங்கித்தார். நியாயப்பிரமாணத்தையும் பிரசங்கித்தார், அவருடைய உபதேசத்தையும் பிரசங்கித்தார். ஏனென்றால் முன் கூறியவாறு அவர் நியாயப்பிரமாணத்தில் வாழ்ந்தார் இதனை கலா 4:5 இல் நம்மால் பார்க்க முடிகிறது.
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
கலா 4:5
இதுமட்டுமல்லாமல் அவர் பஸ்கா கொண்டாடுவதும்(மத் 26:7), விருத்தசேதனம்(லூக் 2:21) பெற்றிருப்பதும் இவர் நியாயப்பிரமாண சட்டங்களை பின்பற்றினார் எனவும் நமக்கு தெளிவாகிறது. இது மட்டுமல்லாமல் மத் 23:23
மத் 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்.
வசனப்பகுதியில் அவருடைய போதகம் நமக்கு புரிகிறது, மற்றும் மத்தேயு 5:31,32 வசனங்களை பார்க்கும் போது இங்கு அவர் நியாயப்பிரமாணத்திலிருந்து வேறு எதையோ ஒன்றை உபதேசிப்பதாய் நமக்கு தோன்றலாம் ஆனால் நாம் மேலே படித்த வசனத்தின் படி அவர் நியாயப்பிரமாணத்தையும் கைபிடிக்க சொல்லியிருந்தார்.
மத் 5:31,32
5:31 தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும் தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.
5:32 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
இன்னும் சற்று தெளிவாக பார்த்தால் அவர் நியாயப்பிரமாணத்தின் சட்டத்திலுள்ள உள் கருத்தை புரிந்துகொண்டு அதை பின்பற்றுங்கள் என்பதையே பிரசங்கித்தார். இதையே அவர் இரண்டையும் செய்ய வேண்டும் என மத் 23:25இல் சொல்வதை பார்க்கிறோம்.
மத் 23:25 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
யாருக்கு இந்த உபதேசம் கொடுக்கப்பட்டது:
இயேசுவின் உபதேசங்கள் யாவுமே யூதர்கள் அல்லது இஸ்ரவேலர்களுக்கே கொடுக்கப்பட்டது. எப்படி? என்கிறீர்களா? முதலாவது இயேசு வந்தது மத் 15:24 இன்படி
மத் 15:24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
இஸ்ரவேலருடைய மனந்திரும்புதலுக்காக தான். ‘என்ன! அப்போ அவர் நம் அனைவருக்காகவும் வரவில்லையா?’ என்ற கேள்வி உங்களுக்கு இங்கு எழுந்திருக்கும் இந்த கேள்வியை அப்படியே மனதில் வையுங்கள் இதைபற்றி நிச்சயமாக, பிற்பாடு இன்னொரு பதிவில் பார்ப்போம். இப்போது இந்த தலைப்பை தொடர்வோம்.
தன்னுடைய சீஷர்களையும் அவர் இஸ்ரவேலரித்திற்கு மட்டும் போகுமாறு கட்டளையுமிட்டார். இதனை மத் 10:5,6 வசன பகுதிகளில் நம்மால் காண முடிகிறது.
மத் 10:5,6
10:5 இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
10:6 காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
மேலும் அவர் விருத்தசேதமுள்ளவர்களுக்கு ஊழியராய் வந்தார் என பவுல் ரோமர் 15:8 இல் குறிப்பிடுவதையும் நம்மால் வாசிக்க முடிகிறது.
ரோமர் 15:8 மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;
இப்படி அவர் நியாயப்பிரமாணத்தின் உண்மை கருத்தை இஸ்ரவேல் மக்களுக்கு புரியவைத்து அதனை நிறைவேற்றி முடிப்பதையே நோக்கமாய் கொண்டிருந்தார். அப்போ இந்த உபதேசமும் நமக்கு இல்லையா? ஆனால் இயேசு சொன்னவை எல்லாம் நல்லது தானே? என சில பல கேள்விகள் நமக்கு எழுவது வாஸ்தவம் தான். இதற்கெல்லாம் விடை பின்னால் கிடைக்கும் தொடர்ந்து படியுங்கள்.
முடிவு:
இயேசு கிறிஸ்து இறக்கும்போது நியாயப்பிரமாணத்துடன் சேர்த்து, இயேசுவின் உபதேசமும் முடிகிறது. இது ஏன் என்றால் அவர் மரணத்திற்கு பிறகு வேறு ஒரு உபதேசம் துவங்குகிறது.
நோக்கம்:
இயேசுவின் உபதேசத்தின் சில நோக்கங்கள் பின்வருமாறு
- நியாயப்பிரமாணத்தின் உண்மை கருத்து புரிய வைக்க
- நியாயப்பிரமாணம் செய்ய முடியாதது இல்லை என புரிய வைக்க
- இஸ்ரவேலரை புது உபதேசத்திற்கு தயார் செய்ய
அப்போஸ்தலருடைய உபதேசம்
இது என்ன புது உபதேசம்? இது தான் இயேசுவானவர் மரித்த பின்பு தொடங்கிய உபதேசம். இதனை கிறிஸ்துவின் உபதேசம் என்றும் வேதாகமம் 2யோவான் 1:9 வசனபகுதி மூலமாய் நமக்கு தெரியபடுத்துகிறது.
2யோவான் 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
அது எப்படி அப்போஸ்தலர் உபதேசமும் கிறிஸ்துவின் உபதேசமும் ஒன்றாகும்? என கேட்கிறீர்களா?
அதற்கு நாம் அப்போஸ்தலரை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
- அப்போஸ்தலர்கள் என்றால் யார்? அந்த பெயரின் பொருள் என்ன?
அப்போஸ்தலர்கள் என்றால் ஒரு நோக்கத்திற்காக அனுப்பப்படுகிறவர்கள் என அர்த்தம்
- அவர்கள் எப்படி எந்த விதத்தில் விசேஷித்தவர்கள்?
- அவர்கள் இயேசுவினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (யோவான் 15:16)
- அவர்கள் இயேசுவினால் நேரடியாக அனுப்பப்பட்டவர்கள் (யோவான் 20:21)
யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
யோவான் 20:21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
- அது ஏன் அவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
நாம் இந்த பதிவின் துவக்கத்தில் பார்த்தது போல் முதலில் நியாயப்பிரமாண சட்டம் அல்லது உபதேசம் நிலுவையில் இருந்தது. எபி 9:15-17 வசனபகுதியின் படி இயேசுவின் மரணத்தில் தான் இந்த சட்டம் முடிகிறது. அதே சமயத்தில் நியாயப்பிரமாணத்தை நிறைவு செய்ததன் மூலம் புதிய பிரமாணம் ஒன்றை அவர் துவங்குவதை நாம் பார்க்க முடிகிறது. இதையே கிறிஸ்துவின் பிரமாணம் என மேலே நாம் பார்த்தோம்.
எபி 9:15-17
9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
9:16 ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
9:17 எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.
இருந்தும் இந்த புதிய சட்டத்தை மக்களுக்கு உபதேசிக்க ஆட்கள் தேவையில்லையா? ஆனால் யார்வேண்டுமானாலும் இதை உபதேசித்திட முடியாது. கிறிஸ்துவின் உபதேசத்தை பிரசங்கிக்க இயேசுவோடு கூடவே இருந்து அவரை பற்றி சாட்சி சொல்லுகிறவர்கள் தேவை. அப்போது தான் மக்கள் அதை ஏற்றுகொள்வர்.
அதற்காக தான் இவர்களை முதலில் தேர்வு செய்து சில அதிகாரங்களையும் கொடுத்து அனுப்பினார். இதனை நாம் லூக்கா 9:15-17 வசன பகுதியில் பார்க்க முடிகிறது.
ஆனால் இது அவர் மரணத்திற்கு முன்பு தானே! அப்போ கிறிஸ்துவின் உபதேசம் கிடையாதே? என்று நீங்கள் யோசிப்பது நியாயமானது தான். அப்போது அவர் அனுப்பினது வேறு நோக்கத்திற்காக தான் ஆனால் அதில் இன்னொரு நோக்கமும் இருந்தது. அப்போது இயேசுவின் உபதேசத்தை பிரசங்கித்தவர்கள் தான், அற்புதம் அடையாளம் செய்தவர்கள் தான் பிற்காலத்தில் கிறிஸ்துவின் உபதேசத்தை பிரசங்கிக்க போகிறார்கள். இது மக்களுக்கு இவர்களை நம்ப பெரிதும் உதவ போகிறது.
முன்பு அந்த உபதேசத்திற்கு அதிகாரம் கொடுத்தவர் மத் 28:19,20 இல் இந்த புது உபதேசத்தை பிரசங்கிக்கவும் அதிகாரம் கொடுக்கிறார்.
மத் 28:19,20
28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
இப்படி கிறிஸ்துவிடத்தில் கேட்டு அதையே அவர்கள் உபதேசம் பண்ணினார்கள் என்பதற்கு எபி 2:3 வசனம் நமக்கு சாட்சி பகிர்கிறது.
முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
எபி 2:3
உபதேசத்தின் துவக்கம்:
இந்த உபதேசம் முதன் முதலாக அப் 2ஆம் அதிகாரத்தில் பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் பெந்தெகொஸ்தெ என்னும் பண்டிகையின் பிரசங்கிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.
பெயர்:
அப்போஸ்தலருடைய உபதேசம் முதல் முதலாக அப் 2:42 இல் தான் வேதாகமத்தில் வருகிறது. நாம் முன்னமே பார்த்தது போல் 2யோவான் 1:9இல் வேதாகமம் இந்த உபதேசத்திற்கு கிறிஸ்துவின் உபதேசம் என்ற மற்றொரு பெயரையும் நமக்கு தெரிவிக்கிறது.
அப் 2:42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
2யோவான் 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
யார் மூலமாய் கொடுக்கப்பட்டது?
இதற்கான விடை இதனுடைய பெயரிலேயே இருக்கிறது. இது அப்போஸ்தலர்கள் மூலமாய் கொடுக்கப்பட்டது. இன்னும் தெளிவாக எபி 2:3 இல் இது கிறிஸ்துவினால் அப்போஸ்தலருக்கு அறிவிக்கப்பட்டு பின்பு அவர்களால் நமக்கு உறுதி செய்யப்பட்டது என காண்கிறோம்.
எபி 2:3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
உபதேசத்தின் சில மையக்கருத்துக்கள்:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2ஆம் அதிகாரத்தில் தொடங்கும் இந்த உபதேசம், கிறிஸ்தவம், சபை அமைப்பு, காணிக்கை, ஜெபம், ஞானஸ்நானம், நியாயதீர்ப்பு, நித்தியஜீவன், கிறிஸ்தவர்களின் குணநலன்கள் என அநேக முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது
யாருக்கு கொடுக்கப்பட்டது:
இதற்கான விடையும் உங்களுக்கு மேலிருக்கும் பட்டியலிலிருந்தே தெரிந்திருக்கும். கிறிஸ்துவின் உபதேசம் என்கிற பெயரிலேயே இது கிறிஸ்தவர்களுக்கான உபதேசம் என வேதாகமம் தெளிவுபடுத்துகிறது. இந்த உபதேசம் இயேசு உயிர்த்தெழுந்து, முதல் முதல் பெந்தெகொஸ்தே நாளிலே கிறிஸ்தவம் ஆரம்பித்தது முதல் உலகம் முடியும் வரை உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்காகவும் விசேஷமாக, கிறிஸ்தவர்களுக்காகவும் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முடிவு:
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை இந்த உபதேசத்தில் தான் நாம் வாழ்ந்து பரலோகத்திலே சென்றடைய போகிறோம்.
நோக்கம்:
நாம் நித்திய ஜீவனை அடைய நமக்கு போதிப்பதும், அதற்கு நம் வாழ்கையை தெளிவு படுத்துவதுமே இந்த உபதேசத்தின் முக்கியமான நோக்கம்.
‘இதெல்லாம் சரி இன்னும் நாம் மற்ற உபதேசங்களை பின்பற்றலாம் என்கிற கேள்விக்கு விடையே அளிக்க வில்லையே?’ என யோசிக்க வேண்டாம். இன்னும் மீதம் இருக்கும் அந்த ஒரு உபதேசத்தை பற்றியும் பார்த்துவிட்டு இதற்கான பதிலுக்கு போவோம்.
மனுஷனுடைய உபதேசம்
நாம் மேலே பார்த்த மற்ற உபதேசங்களுக்கும் இந்த உபதேசத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. மேல் கண்ட மூன்று உபதேசங்களும் தேவனால் ஆனவை, இது மட்டும் மனிதரால் ஆவது.
உபதேசத்தின் காலக்கட்டம்:
இந்த உபதேசத்திற்கு குறிபிட்ட துவக்கம் எதுவும் கிடையாது. ஆதி காலம் முதல் மக்களை குழப்புவதும், தவறான பாதையில் தள்ளுவதும் இதன் அம்சமாக இருப்பதால். இது பிற உபதேசங்கள் இருந்த காலத்திலும், ஏன் இப்போதும், உலகம் முடியும் வரை இருக்க தான் செய்யும்.
நியாயப்பிரமாண உபதேசக்காலத்தில்: ஏசாயா 29:13 இல் இது பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்தே இருப்பது நமக்கு தெரிகிறது.
ஏசா 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
இயேசுவின் உபதேசக்காலத்தில்: மத் 15:1-9 இந்த வசன பகுதியில் வேதபாரகரும் பரிசேயரும் தேவனுடைய கற்பனையை மீறி நடக்கிறார்கள் என்றும் அவர்களுடைய பாரம்பரியங்களை நிறுத்த தேவனுடைய கற்பனைகளை அவமாக்குகிறார்கள் என்றும் இயேசு ஏசாயா 29:13 திரும்ப இங்கு நினைவு படுத்தி காட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
மத் 15:1-9
15:1 அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
15:2 உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.
15:3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
15:4 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
15:5 நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து,
15:6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து:
15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.
15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
அப்போஸ்தலருடைய உபதேசக்காலத்தில்: 2கொரி 2:17 இல் பவுல் இங்கு அநேகர் வேதவசனத்தை கலப்பாய் பேசுகிறார்கள் என சொல்லுவதை பார்க்க முடிகிறது. இதிலிருந்து அப்போஸ்தலர் காலத்திலும் மனுஷருடைய உபதேசங்கள் நிறைய இருந்திருக்கிறது நமக்கு தெரிகிறது.
2கொரி 2:17 அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
இவ்வளவு ஏன் இன்றும் இப்படிப்பட்ட உபதேசங்கள் நிறைய இருந்து கொண்டு தான் இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? பின்னால் பார்ப்போம் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்.
பெயர்:
மத் 15:9, ஏசாயா 29:13 ஆகிய வசனங்களில் இதன் பெயர் வருவதை நாம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உபதேசத்திற்கு மற்றொரு பெயரும் இருக்கிறது. இதனை 1தீமோ 4:1 இல் பிசாசின் உபதேசம் என்றும், பொய்யரின் உபதேசம் அல்லது பொய்யின் உபதேசம் என்றும் கூட வேதாகமம் நமக்கு எச்சரிக்கும் வகையில் குறிப்பிடுகிறது.
மத் 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
1தீமோ 4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
யார்மூலமாய் கொடுக்கப்பட்டது?
நாம் பார்த்தது போல் இந்த உபதேசங்கள் மனிதர் மூலமாய் தான் பரவுகிறது. அதுவும் நாம் மேலே பார்த்த வசனங்களை சற்று கவனித்து பார்த்தால், பரிசேயர், வேதபாரகர், புதிய ஏற்பாட்டின் சுவிசேஷகர்கள் என தேவ மனிதர்கள் போல் தோன்றும் மனிதராலேயே இவை பரப்பப்படுகின்றன என வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுவதை உணர முடிகிறது.
உபதேசத்தின் மையக்கருத்து
நாம் பின்பற்றவேண்டாத மற்ற உபதேசங்களை போதிப்பது, வேதாகமமல்லாது மற்ற போதனைகளை நுழைப்பது, சுய சிந்தனைகளை புகுத்துவது என எல்லாவற்றையும் தேவனுடைய கற்பனையாகவே கற்பிப்பது. இவை தான் இந்த உபதேசத்தின் மையக்கருத்து.
யாருக்கு கொடுக்கப்பட்டது?
இது தேவனால் கொடுக்கப்படவில்லை என முன்னமே நாம் பார்த்தோம். எனவே இது யாருக்கும் கிடையாது. ஆனால் துரதிஷ்ட வசமாக இன்று அநேகர் இந்த மாதிரி பொய்யான உபதேசங்களால் வஞ்சிக்கப்பட்டு அதிலிருந்து வெளிவரமுடியாமல் சிக்கிக்கொண்டும் இருக்கின்றனர்.
நோக்கம்:
இது எந்த பெரிய ஒரு நோக்கத்திற்காகவும் உபதேசிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் இது வேதாகமத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் வருமானத்திற்காக செய்யப்படும் ஒரு தவறாக தான் இருக்கிறது. இதனை பற்றி 1 தீமோ 1:7 இல் இவர்கள் தாங்கள் சொல்லுகிறதும், சாதிக்கிறதும் என்னதென்று அறியாமலேயே அதை செய்கிறார்கள் என வேதாகமம் இவர்களை குறித்தும் எச்சரிக்கிறது.
தீமோ 1:7 தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
எந்த உபதேசத்தை நாம் பின்பற்ற வேண்டும்?
நாம் பார்த்த 4 உபதேசங்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் உபதேசம் அதாவது அப்போஸ்தலருடைய உபதேசத்தை தான் பின்பற்ற வேண்டும் என முன்னமே பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் 2யோவான் 1:9 இன் படி
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல;
2யோவான் 1:9
என மற்ற உபதேசங்களின் பேச்சையே முற்றிலுமாக வேதாகமம் தடை செய்து எச்சரிக்கிறது. இதையும் தாண்டி மற்ற உபதேசங்களை பின்பற்ற கூடாதா? என்னும் கேள்விக்கான விடையை இப்போது பார்ப்போம்.
நியாயப்பிரமாண உபதேசமும், இயேசுவின் உபதேசமும் நியாயப்பிரமாணத்தை மூலமாக கொண்டது என நாம் பார்த்தோம். இவை அனைத்தும் இஸ்ரவேலருக்காக கொடுக்கப்பட்டது என்றும் நாம் பார்த்தோம். இதனை ரோமர் 3:19 நமக்கு மறுபடியுமாய் ஒருவிசை தெளிவு படுத்துகிறது. இதனால் நாம் நியாயப்பிரமாணத்தில் இருக்கும் எதையும் பின்பற்ற தேவையில்லை என்பது உறுதியாகிறது.
இப்போது ஏன் நியாயப்பிரமாணத்திலிருக்கும் எதையும் நாம் பின்பற்ற கூடாது என பார்ப்போம்.
- முதலாவதாக ரோமர் 10:4 இன் படி கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
ரோமர் 10:4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
2) இரண்டாவது நியாயப்பிரமாணத்தில் கொஞ்சம் மட்டும் சேர்த்துக்கொள்ளலாமே என நாம் நினைக்கலாம். ஆனால் நியாயப்பிரமாணத்தை பின்பற்ற நினைக்கிறவர்கள் யாவரும் அதிலிருக்கும் அனைத்து சட்டங்களையும் பின்பற்றியே ஆக வேண்டும் என யாக் 2:9, கலா 5:3 வசங்களின் மூலம் வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது.இதன் படி பார்த்தால்
- தசமபாகம்
- பஸ்கா
- இசை
- ஓய்வுநாள்
- பண்டிகைகள்
என சிலவற்றை மட்டும் பின்பற்ற விரும்புபவர்கள், விருத்தசேதனம், பலிகள், தேவாலயத்து ஆசரிப்பு பணிகள் என்ற இன்னும் மற்ற கற்பனைகளையும் பின்பற்றியே ஆகவேண்டியதாய் இருக்கும்.
யாக் 2:10 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
கலா 5:3 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன்.
அதுவுமல்லாமல் நியாயப்பிரமாணத்தினால் யாரும் நீதிமானாக முடியாது என்றும் கலா 2:16 இன் மூலம் வேதாகமம் திட்டவட்டமாக கூறுகிறது.
3) மூன்றாவது நாம் நியாயப்பிரமாணத்தை சேர்த்துக்கொள்ளவோ, அதை பின்பற்றவோ நினைத்தால் நாம் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறோம் என்றும், இன்னும் ஒரு படி மேலே சென்று கிறிஸ்துவின் மரணத்தில் முடிந்த ஒன்றை பின்பற்றுவதால் கிறிஸ்துவின் மரணமே வீண் என்றும் ஆக்குகிறோம் என கலா 2:21 இன் மூலம் நமக்கு விளக்கி எச்சரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் அப்படி நியாயப்பிரமாணத்தை பின்பற்ற விரும்புகிறவர்கள் கிறிஸ்துவைவிட்டு பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள் என்றும் வேதாகமம் கலா 5:4 இன் மூலம் நமக்கு சொல்லுகிறது.
கலா 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
கலா 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
இப்படி ஒருவேளை நம்மை நியாயப்பிரமாணத்தை பின்பற்றுமாறு உபதேசிப்பவர்களை கள்ள சகோதரர் என வேதாகமம் கலா 2:4 இன் மூலம் முத்திரை குத்துகிறது
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாரணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
கலா 2:4
சரி நியாயப்பிரமாணத்தை நாம் ஏன் பின்பற்றவே கூடாது என தெளிவாய் பார்த்தோம். மற்ற மனிதர் உபதேசங்களை பின்பற்றலாமா? கூடாது என உங்களுக்கே புரிந்திருக்கும். முதலாவது இந்த மனிதர் உபதேசம் என்பது வேதாகமத்தில் இல்லாததை சொல்வது, இருப்பதை வேறு விதமாய் சொல்வது என எல்லாமே இதில் அடங்கும். சொல்லப்போனால் நியாயப்பிரமாணத்தை கிறிஸ்தவர்கள் மீது திணிப்பதும் இதில் அடங்கும். தேவனால் கொடுக்கப்பட்டு முடிந்த உபதேசங்களை பின் பற்றுவதிலேயே எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதென்று நாம் பார்த்தோம். இதுவோ தேவனால் கட்டளையிடப்படாதது. உதாரணமாக
- கிறிஸ்துமஸ்
- ஈஸ்டர்
- மரியாள் தெய்வமாக
இவையெல்லாம் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டும் என்று வேதாகமத்தில் எங்கேயாவது நாம் கண்டுபிடிக்க முடியுமா? என்றால் முடியாது. ஏனென்றால் இவை வேதாகமத்தில் கிடையவே கிடையாது. உலகமெங்கும் பெரிதளவில் பின்பற்றப்படும் இவை அனைத்தும் மனிதருடைய உபதேசங்களே! இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் என்ன பாதிப்பு நேர்ந்து விட போகிறது? என நீங்கள் நினைப்பது இயல்பு தான். ஆனால் இந்த உபதேசத்தையே பிசாசின் உபதேசம் என வேதாகமம் சொல்வதை நாம் முன்னமே பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் வேதாகமத்திலுள்ளதை மற்றும் பின்பற்றவேண்டிய அவசியத்தை முன்னமே ஒரு பதிவிலும் பார்த்தோம். இப்போது சொல்லுங்கள் இந்த பிசாசின் உபதேசத்தை அதாவது பொய்யின் உபதேசத்தை சும்மா கூட நாம் பின்பற்றலாமா இல்லை பின்பற்றலாம் என்று நினைக்கக்கூட செய்யலாமா?
இதுமட்டுமல்லாமல் அப்படி கிறிஸ்துவின் உபதேசத்தை தவிர வேறு ஒரு உபதேசத்தை பிரசங்கிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று வேதாகமம் கலா 1:8இல் சொல்வதை பார்க்கிறோம்.
கலா 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
அப்படிப்பட்டவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் எனவும் கெட்ட சிந்தை உள்ளவர்கள் எனவும், அவர்களை விட்டு விலக வேண்டும் எனவும் 1தீமோ 6:3-5 வசனங்களின் மூலமாக வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது.
1தீமோ 6:3-5
6:3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
6:4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குத்தத்தங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
இந்த பதிவின் மூலம் வேதாகமத்திலுள்ள நான்கு வகையான உபதேசங்கள் பற்றியும், எந்த உபதேசத்தை நாம் பின்பற்ற வேண்டும் எதை பின்பற்றகூடாது என்பது பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் தெளிவாய் பார்த்தோம்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்களோ, அல்லது வேதாகமத்தை இன்னும் முறையாக கற்றுக்கொள்ளவேண்டும் என விரும்பினாலோ கீழே கமெண்டின் மூலம் எங்களுக்கு தெரிய படுத்துங்கள்.

Praise the lord. நான் வேதாகம ரகசியங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
ஐயா தாங்கள் எங்கு உள்ளீர்கள்? சென்னை என்றால் நேரிலேயே கற்றுக்கொள்ளலாம். என் WhatsApp இல் என்னை தொடர்பு கொள்ளுங்களேன். நான் விவரங்களை சொல்கிறேன்.
thanks for your team
All Glory and Praise belongs to God. Thanks for your wishes. Feel free to check out our YouTube channel as well.